கோபிச்செட்டிப்பாளைம் பகுதியில் 2ஆம் போக நெல் சாகுபடிக்கு நடவு பணிகள் தீவிரம்!

 
paddy farm

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் மழை நின்றுள்ளதால் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக  நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து வெளியேறும் ஆற்றுநீரை கொடிவேரி தடுப்பணை மூலம் தேக்கிவைத்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு கால்வாய்கள் கடந்த 700 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு கால்வாய்களின் மூலம் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 

paddy planting

அதன் தொடர்ச்சியாக, இந்த பகுதி விவசாயிகள் நெல் சாகுபடிக்கான ஆரம்பகட்ட உழவு பணிகளை தொடங்கிய நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பணிகள் தடையுற்றது. இந்நிலையில் தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ளதால் விவசாயிகள் மீண்டும்  நெல் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக , கோபி, பாரியூர் மற்றும் புதுக்கரை புதூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப கட்ட உழவு பணிகள் முடிந்த பின் தற்போது தீவிரமாக நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது கோ 39  ,ஏ.டி.டீ 40, ஏ.எஸ்.டி 16 ஆகிய நெல் ரகங்கள் பயிர் செய்து வருவதாகவும், நடவு செய்த நாளிலிருந்து 120 நாட்களில் பயிர் செய்த நெல்  அறுவடைக்கு தயாராகும் என்று விவசாயிகள் தரப்பில்  தெரிவித்தனர்.