பல்லடத்தில் கூலிஉயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

 
power loom weavers

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் கூலி உயர்வு கோரி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடம்  பாவு, நூல் வாங்கி அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுப்பது இவர்களது வேலை.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் தினசரி 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான கூலி நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டிற்கு பின் கடந்த 7 ஆண்டுகளாக விசைத்தறிகளுக்கான  கூலி உயர்வு முழுமையாக கிடைக்க வில்லை. விலைவாசி உயர்வு காரணமாக இந்த தொழிலை கைவிட்டு பலரும் வேறு வழிகளை தேடியும், தொழிலுக்காக வாங்கிய கடனை  செலுத்த வழியின்றி தங்களது சொத்துக்களை இழந்தும் விசைத்தறியாளர்கள் தவித்து வருகின்றனர்.

tiruppur

இந்த நிலையில்,  கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து  புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 21ஆம் தேதி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக்கப்பட்ட பல்லடம் இரக்கத்திற்கு 20 சதவீதம், சோமனூர் இரக்கத்திற்கு 23 சதவீதம் கூலி உயர்த்தப்பட்டது.ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள்  கூலி உயர்வை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

அவர்களது மெத்தனப்போக்கை கண்டித்து விசைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் பல்லடம், சோமனூர், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 சங்கங்கள் சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருப்பூர், கோவை மாவட்டங்களில்  2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி உற்பத்தி பாதிக்கப்படும். நேரடியாக 2 லட்சம், மறைமுகமாக 2 லட்சம் என 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.