"ஜெய்பீம் படத்தில் காட்சிகளை நீக்கிய பிறகும் எதற்காக சூர்யா மீது பாய்கிறார்கள் என தெரியவில்லை" - செல்வபெருந்தகை

 
selvaperunthagai

5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளதாகவும், ஜெய்பீம் படத்தில் நீக்க வேண்டுமென்ற காட்சிகளை நீக்கிய பிறகும் எதற்காக சூர்யா மீது பாய்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும், காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார். மகாத்மா காந்தி அகிம்சை வழியில் சத்தியாகிரகம் செய்து அறப்போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல், இந்தியாவில் உள்ள விவசாயிகள் இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 2வது சுதந்திரப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதாக, பஞ்சாபை சேர்ந்த விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, விவசாயிகள் போராட்டம் வெற்றி பெறும். பிரதமர் சட்டத்தை திரும்பப் பெறுவார். அதுவரை எங்களின் ஆதரவு தொடரும் என்று அறிவித்தார். அதன்படி, ஓராண்டாக பிடிவாதமாக இருந்த பிரதமர் மோடி,  திரும்ப பெற்றுள்ளார். 

cong

விவசாயிகள் மீதான பரிவால் இதனை திரும்பப் பெறவில்லை. 15 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அடுத்து நடக்கவுள்ள உத்திரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜக தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பயத்தினால் தான் சட்டங்கள் திரும்பப் பெற்றுள்ளார். அவர் சித்தாந்தத்தில் இருந்து மாறுபடுவதாக பொருளில்லை. 
ஆனால், இந்திய விவசாய மக்கள் பாஜகவை ஏற்கவோ, நம்பவோ மாட்டார்கள். இனிவரும் காலங்களில் படுதோல்வியை பாஜக சந்திக்கும். இதுவரை 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு பாஜகவும், பிரதமர் மோடியும் பதில் சொல்ல வேண்டும். 

திரைப்படத்தில் ஜாதி, மதம் புகுத்தக்கூடாது. ஜெய்பீம் படத்தில் நீக்க வேண்டும் என்ற காட்சிகளை நீக்கிய பிறகும் எதற்காக சூர்யா மீது பாய்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த உண்மைக் கதையைப் போல் இனிமேல் அரச பயங்கரவாதம் நடக்கக் கூடாது என்று தான் எல்லா சமுதாய இளைஞர்களும் பேசுகின்றனர். யாரும் குற்றம் கண்டுபிடிக்க வில்லை. அடித்தட்டு மக்களின் அவல நிலையை இன்னும் பல திரைப்படங்கள் பேச வேண்டும்.  இதுவரை வேறு எந்த முதல்வரும் செய்யாத அளவுக்கு முதல்வர் ஸ்டாலின், அசுர வேகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார். 

cong

வேளாண்மை திருத்தச்சட்டத்தில் ஒரு கமா கூட எடுக்க மாட்டோம். இந்த சட்டங்களைத் திரும்பபெற வாய்ப்பில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னார். ஆனால், இப்போது, அவரது கட்சி, பிரதமர் இதனைத் திரும்பப் பெற்றுள்ளது. வேளாண் சட்டத்தை திரும்பப் பெற்றது போன்று, பெட்ரோல், டீசல் விலையைத் திரும்பப் பெற வேண்டும். அதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.