பெரியகுளத்தில் ஹோமியோபதி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை... உடலை பெற மறுத்து உறவினர்கள் போராட்டம்!

 
suicide

தேனி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் பணம் கேட்டு மிரட்டியதால் ஹோமியோபதி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(50). இவர் முறைப்படி ஹோமியோபதி மருத்துவம் படித்து விட்டு, அந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக ஹோமியோபதி கிளீனிக் நடத்தி வந்தார். கடந்த ஒராண்டுக்கு முன்பு சீனிவாசனை பார்க்க வந்த மாவட்ட குடும்ப நல மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குநர் லெட்சுமணன், பணம் கேட்டதோடு, கொடுக்காவிட்டால் போலி மருத்துவம் பார்ப்பதாக கூறி வழக்குப்பதிவு செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மருத்துவர் சீனிவாசன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

theni

 இதனிடையே, மருத்துவத்துறை இணை இயக்குநர் லெட்சுமணன் பணம் கேட்டு மிரட்டியதால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த மருத்துவர் சீனிவாசனின் மனைவி சாந்தி பெரியகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.  மேலும், இணை இயக்குனரை கைது செய்யாவிட்டால் கணவரின் உடலை வாங்கி கொள்ளமாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து, அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.