பள்ளி மாணவிக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி தொல்லை; வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை!

 
murder

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மாணவிக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பிய பீகார் மாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரித்திஷ் யாதவ் மகன் அனில்குமார்(22). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தெக்கலூரில் செயல்பட்டு வரும் பனியன் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அதேபோல், கோவை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தெக்கலூர் அடுத்த எம்.நாதம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில், சிறுமிக்கு அனில்குமார் வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அனில்குமாரை கண்டித்து சிறுமிக்கு தொல்லை அளிக்க கூடாது என எச்சரித்து உள்ளனர். ஆனால், அதனை மீறி அனில்குமார் மீண்டும் சிறுமிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த, சிறுமியின் உறவினர்கள் நேற்று அனில்குமாரை சரமாரியாக தாக்கினர்.

tiruppur

இதில் பலத்த காயமடைந்த அவரை நண்பர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உறவினர்கள் கோவையை சேர்ந்த ரவி(40), பாபு(40), எம்.நாதம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித், மணிகண்டன்(23) ஆகியோரை கைது செய்தனர்.