பெருந்துறை அருகே பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்... வன்கொடுமை சட்டத்தில் ஒருவர் கைது

 
sc attack


பெருந்துறை அருகே வாய்க்காலில் குளித்த பட்டியலின கல்லூரி மாணவர்களை அரை நிர்வாணமாக்கி தாக்கியுடன், சாதி பெயரை கூறி திட்டிய இளைஞர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோயில் அருகில் கண்ணவேலாம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில், எருக்காட்டுவலசு பகுதியை சார்ந்த அருந்ததியர் சமூக கல்லூரி மாணவர்கள் மதிவாணன், தேவேந்திரன், நவநீதன், கெளதம், மோகன், சரவணன்,சச்சின், சேவாக் ஆகியோர் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு சமூகத்தை சார்ந்த முள்ளம்பட்டி, ஒலப்பாளையம் ராமசாமி மகன் பிரகாஷ் என்பவர்  அடுத்த ஊரை சேர்ந்த நீங்கள் எதற்காக இங்கு குளிக்க வந்தீர்கள் என கேட்டு இளைஞர்களை சாதி பெயரை கூறி திட்டி உள்ளார்.  

அருந்ததியர்

தொடர்ந்து, தனது டிராக்டரில் இருந்த கயிற்றை எடுத்து அந்த இளைஞர்களை அடித்து துன்புறுத்தி உள்ளார்.  மேலும், அவர்களை ஜட்டியுடன் ஒட ஒட விரட்டி சென்று சாலையில் சுமார் 1 மணிநேரம் அரை நிர்வாணமாக நிற்க வைத்தார். பின்னர், இனிமேல் தங்கள் ஊருக்கு பட்டியலின சமூக இளைஞர்கள் வந்தால் இதுதான் நிலை எனவும் மிரட்டி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த இளைஞர்களின் பெற்றோர்கள் உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் 6  பேரையும்  சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் விசுவநாதன் சந்தித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை எடுக்க உதவியுள்ளார். இந்த நிலையில், அருந்ததியர் இளைஞர் பேரவை மற்றும் மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி கூறினார். 

sc attack

மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக மாவட்ட எஸ்.பி சசிமோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து காஞ்சிகோயில் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிகோயில் காவல் நிலைய குற்ற எண். 217 - 2021, பிரிவுகள் 323, 506 (1), 3 (1) (V1).33(1)CS).3(2) SC/STACT 2015, குற்றவாளி பிரகாஷை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.