கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ.4 லட்சம் குட்கா கடத்தல்!

 
gutka

தருமபுரி அருகே கண்டெய்னர் லாரியில் ரகசிய அறையில் அமைத்து கடத்திவரப்பட்ட ரூ.4 லட்சம் குட்கா புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே முண்டாசுபுறவடை பகுதியில் நேற்று அதியமான்கோட்டை காவல் ஆய்வாளர் ரங்சாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலையோரம் கண்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரற்ற நிலையில் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து, அதியமான்கோட்டை போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை சோதனையிட்டபோது, அது காலியாக இருந்தது. 

dharmapuri ttn

எனினும் சந்தேகமடைந்த போலீசார், கண்டெய்னரின் வெளிப்பகுதி மற்றும் உள்பகுதியை அளவீடு செய்து பார்த்தனர். அதில், வெளிப் பகுதியை விட உட்புற பகுதி சிறியதாக இருந்ததால், கண்டெய்னரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கண்டெய்னரில் வெல்டிங் செய்யப்பட்ட நிலையில் ரகசிய அறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அந்த அறையை திறந்து பார்த்தபோது, அதில் 40 மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும், அது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்டதும், இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, குட்காவை கடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றன்ர.