திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ஏற்றப்பட்ட மகா தீபம்!

 
trichy

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 50 அடி உயர செப்புக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகில் உள்ள 50 அடி உயர செப்பு கொப்பரையில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி , நேற்று முன்தினம் மாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தாயமானவர் சன்னதியில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு தாயுமானவர் - மட்டுவார் குழலம்மை உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளித்தனர். 

rockfort

தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட மலைக் கோட்டை உச்சி தாயுமானவர் சன்னதி, பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள 50 அடி உயரமான இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி, 100 கிலோ எடை கொண்ட 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வானவேடிக்கைகள் முழங்க ஏற்றப்பட்டது. 

rockfort

அப்போது, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு தீபாராதணை நடைபெற்றது. நேற்று மாலை ஏற்றப்பட்ட இந்த மகாதீபம் தொடர்ந்து 3 நாட்கள் இரவும், பகலும் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகை மகா தீப திருவிழாவிற்கான  ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிவாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர்.