வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பாட்டி, பேத்தியை மீட்ட இளைஞர்கள்!

 
tiruppathur

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மூதாட்டி மற்றும் அவரது 4 வயது பேத்தியை இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அங்குள்ள நரசிங்கபுரம் ஏரி நிரம்பி அதிகளவு உபரிநீர் கால்வாயில் வெளியேறி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கால்வாய் மீதுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்யது. அந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு வழியின்றி வெள்ளநீரில் உயிருக்கு ஆபத்தான முறையில் சாலையை கடந்து வருகின்றனர். 

tirupathur

இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி லட்சுமி என்பவர் தனது 4 வயது பேத்தியுடன் வெள்ளம் பாய்ந்தோடும் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமியும், அவரது பாட்டியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக கால்வாயில் குதித்து வெள்ளத்தில் தத்தளித்த 2 பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்ட இளைஞர்களுக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.