பெரம்பலூர் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு... 11 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுப்பு!

 
flood alert

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை கிராமத்தில் உள்ள மருதையாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்த அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மருதையாற்றின் கரையோரம் உள்ள 11 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா கூறியதாவது, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கடந்த 1 வாரத்திற்கு முன்பே முழு கொள்ளளவான 212.47 மில்லியன் கனஅடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.  மேலும், மழை தொடர்வதால் நீர்த் தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும்  2,000 கனஅடி நீர் மருதையாற்றில் திறக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், மழை அதிகரித்தால் கூடுதலான நீர் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. இதனால், மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கொட்டரை, குரும்பாபாளையம், ஆதனூர், பிலிமிசை, கூத்தூர், இலுப்பைகுடி, இராமலிங்கபுரம், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம், கூடலூர் ஆகிய 11 கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிக்கப்படுகிறது.  

flood

எனவே ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும், குழந்தைகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவோ, வெள்ள பகுதியை பார்க்கவோ அனுமதிக்க கூடாது எனவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

வெள்ள அபாயம் ஏற்பட்டால் மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகளை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.