மாமனார் வீட்டின் முன்பு 2 மகன்களுடன் அமர்ந்து பெண் போராட்டம்!

 
kovilpatti

கோவில்பட்டியில் தன்னையும், தனது மகன்களையும் மாமனார் வீட்டில் சேர்த்துக்கொள்ளவும், தங்களுக்கு பாதுப்பு வழங்கவும் வலியுறுத்தி பெண் ஒருவர், 2 மகன்களுடன் மாமனார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி ராஜன்(41). இவரது மனைவி கீதா(38). இவர்களுக்கு ஸ்ரீஜெயசூர்யா(15), ஸ்ரீ அரவிந்த கார்த்திக்(13) என்ற 2 மகன்கள் உள்ளனர். காமாட்சி ராஜன், தனது தந்தை ராஜகோபாலுடன் இணைந்து பழக்கடை நடத்தி வந்த நிலையில், ராஜகோபால் கடையை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்கு காமாட்சி ராஜன் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவரது மைத்துனரான முத்துராஜ் என்பவர் அனுமதிக்கவில்லை என்றும், அவர் காமாட்சி ராஜனை தற்கொலைக்கு தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

tuticorin

இதனால் மனமுடைந்த காமாட்சி ராஜன் விஷம் குடித்த நிலையில்,  கடந்த 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீதா அளித்த புகாரின் பேரில், காமாட்சி ராஜனை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மைத்துனர் முத்துராஜ் மீது கோவில்பட்டி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.  இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு கீதா பழக்கடையை திறந்து வியாபாரம் செய்ய முயன்றபோது, அதற்கு மாமனார் ராஜகோபால் எதிர்ப்பு தெரிவித்து போலீசில் புகார் அளித்தார். இதனால் , போலீசார் கடையின் சாவியை வாங்கி ராஜகோபாலிடம் கொடுத்துள்ளனர். 

இந்த நிலையில், தனது கணவரை தற்கொலைக்கு தூண்டிய முத்துராஜை கைதுசெய்யவும், தன்னையும், தனது 2 மகன்களையும் பாதுகாக்கும் விதமாக கூட்டுக்குடும்பம் நடத்தவும் வலியுறுத்தி கீதா மகன்களுடன் மாமனார் ராஜகோபால் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜகோபால், கீதா ஆகியோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, குடும்ப செலவுக்கு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் தருவதாகவும், பின்னர் குடும்பத்தினருடன் ஆலோசித்து  உரிய பாதுகாப்பு கொடுப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று கீதா தனது போராட்டத்தை கைவிட்டு மகன்களுடன் புறப்பட்டு சென்றார்.