மகன் இறந்த வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

 
poison

ஓசூர் அருகே மகன் இறந்த வேதனையில் தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(35). இவர் வாஷிங் மெஷின் பழுதுபார்க்கும் வேலை வந்தார்.  இவர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு பாக்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஜாராம் (13) என்ற மகன் உள்ளான். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுவன் ராஜாராம் மூளைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

krishnagiri

மகன் இறப்பால் தம்பதியினர் இருவரும் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக பாக்யா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த ஷேக் அலாவுதீன் தானும் விஷத்தை குடித்தார். கணவன் - மனைவி இருவரும் வீட்டில் மயங்கி கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

பின்னர், ஷேக் அலாவுதீன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாக்யாவுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ஹட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மகன் இறந்த வேதனையில் தந்தை விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.