துறையூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி... நீரில் தத்தளித்த மேலும் இருவர் மீட்பு!

 
trichy

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மின்மோட்டாரை சரிசெய்தபோது கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நல்லவன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. விவசாயி. இவரது தோட்டத்து கிணற்றில் உள்ள நீர்மூழ்கி மோட்டார் பழுதாகியதால், நேற்று பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ராமசாமி 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த ராஜ் மற்றும் காமேஸ்வரன் ஆகியோர் உடனடியாக கிணற்றுக்குள் குதித்து, காயமடைந்த ராமசாமியை மீட்டு கயிறு மூலம் மேலே அனுப்பினர். 

trichy

எனினும், ராஜ் மற்றும் காமேஸ்வரனால் மேலே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்த இருவரையும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில், கிணற்றில் விழுந்ததில் படுகாயமடைந்த ராமசாமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த புலிவலம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.