பாதைக்கு நிலம் கொடுக்க மறுத்த குடும்பத்தை 4 நாட்களாக சிறை வைத்த கிராம மக்கள்..

 
ராஜா குடும்பத்தினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தில், ஒரு குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கிராம மக்கள் வேலி அமைத்து பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பூட்டை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் ராஜா,  இவரது வீட்டின் அருகே உள்ள 3 சென்ட் நிலத்தை பொது பாதைக்கு கொடுக்கும்படி  கிராம மக்கள் கேட்டுள்ளனர். ஆனால் ராஜாவோ பட்டா நிலத்தை எப்படி தானமாக அளிப்பது என கூறி அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் இதனால் ஊர்மக்கள் ஒன்றுகூடி ராஜாவின் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே வரமுடியாதபடி,  வீட்டின் வாயில் முன்பு உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்து உள்ளனர். இதனால் கடந்த ஒரு வாரமாக ராஜாவும் அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

Fencing wall
பட்டா இடத்தில் வழி கேட்டு அதனை கொடுக்க மறுத்து விட்டதால் எனது வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் கம்பி வேலி அமைத்து நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாத அளவிற்கு கிராம மக்கள் தடை செய்துள்ளனர்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 


வேலி அமைப்பதற்கு முன்பாக தங்களுக்கு புகார் வந்ததாகவும், வேலி போட்டபின்பு புகார் ஏதும் வரவில்லை எனவும்,  நிலம் தொடர்பான பிரச்சினை என்பதால் வருவாய் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கராபுரம் வட்டாட்சியர் தெரிவித்திருக்கிறார்.