ஆடிப்பூரம் – ஈரோட்டில் கோவில்கள் மூடப்பட்டதால், வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்!

 

ஆடிப்பூரம் – ஈரோட்டில் கோவில்கள் மூடப்பட்டதால், வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஆடிப்பூரத்தை ஒட்டி கோவில்கள் மூடப்பட்டதால், கோவில்களின் வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். எப்போதும் இல்லாத அளவு ஆடி மாதம் முழுவதும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அனைத்து கோவில்களிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை அன்று கோவில்களில் வழிபட பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், நீர்நிலைகளிலும் மக்களின் புனித நீராட தடை விதிக்கப்பட்டது.

ஆடிப்பூரம் – ஈரோட்டில் கோவில்கள் மூடப்பட்டதால், வெளியே நின்று வழிபட்ட பக்தர்கள்!

இந்த நிலையில், நேற்று ஆடிப்பூரத்தை ஒட்டி, மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்வதற்கும், நீர் நிலைகளில் புனித நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பண்ணாரி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன், கோபி சாரதா மாரியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு பெரிய மாரியம்மன், கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 23 கோவில்களில் நேற்று பொதுமக்கள் வழிபாட அனுமதி மறுக்கப்பட்டது.

ஆடிப்பூரத்தையொட்டி, பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று காலை முதலே ஏராளமான மக்கள் அம்மனை வழிபட வந்தனர். ஆனால் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் கோயில் முன்பு நின்று அம்மனை வணங்கி சென்றனர். மேலும், ஆடிப்பூரத்தை ஒட்டி அனைத்துக் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அந்தந்த கோவில் பூசாரிகள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் வாரணாம்பிக்கைக்கு 16 வகையான திருமஞ்சனங்கள் மூலம் அபிஷேகம் நடைபெற்றது. கோவில்கள் மூடப்பட்டிருந்த போதும், பக்தர்கள் காலை முதலே வந்து கோயில் முன்பு நின்று வழிபட்டுச் சென்றனர். சிலர் மஞ்சள், குங்குமம், வேப்பிலை வைத்து சாமி கும்பிட்டு சென்றனர்.