பணத்துக்காக பாட்டியை கொன்ற பேரனுக்கு ஆயுள் தண்டனை... ஈரோடு மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
judgement

ஈரோட்டில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த  பேரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஈரோடு மாவட்டம் ஆர்.என். புதூர் அம்மன் நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் பாபு என்கிற கோபிநாத் (37).  பாண்டியனின் தாய் கவுரி (70) பெருமாள் மலை,  விளையாட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6-7 -2011 ஆம் ஆண்டு கோபிநாத் தனது  நண்பர் பள்ளிபாளையத்தை சேர்ந்த விஜயனுடன், பாட்டி கவுரி வீட்டுக்கு சென்று பணம் கேட்டுள்ளார். அதற்கு கவுரி பணம் தர மறுத்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபிநாத் பெருமாள் மலை பகுதிக்கு பாட்டி கவுரியை அழைத்துச்சென்று, அவரை கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 8.5  பவுன் நகையை திருடிச் சென்றார். 

arrest

இதுதொடர்பாக, சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு என்கிற கோபிநாத் மற்றும் அவரது நண்பர் விஜயன் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.  இந்த வழக்கின் விசாரணையானது ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று வழக்கை  விசாரித்த நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில், கோபிநாத்துக்கு நகையை திருடியதற்காக 10 ஆண்டு தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் வழங்கினார். 

அதேபோல், பாட்டியை கொன்றதற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியிருந்தார். இந்த 2 தண்டனையையும் கோபிநாத் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும்  தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கிலிருந்து கோபிநாத்தின் நண்பர் விஜயன் விடுதலை செய்யப்படுவதாகவும் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.