செல்போன் தர மறுத்த முதியவர் வெட்டிக் கொலை - இளைஞர் வெறிச்செயல்!

 
murder

தூத்துக்குடி அருகே செல்போனை தர மறுத்த முதியவரை அரிவளால் வெட்டிக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் நாகபத்திரம் (65). இவர் நேற்று காலை நட்டாத்தியில் இருந்து மீனாட்சிபட்டி செல்லும் சாலையில் உள்ள ஓடைப்பாலம் அருகே வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். தகவலறிந்த சாயர்புரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

arrest

மேலும், சாயர்புரம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தனிப்படை போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையின்போது, நட்டாத்தி ஓடைப்பாலம் அருகிலுள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பிடிபட்ட நபர் சாயர்புரம் கொம்புகாரன்பொட்டலை சேர்ந்த தங்கராஜ் என்கிற தங்கம் (20) என்பது தெரியவந்தது. கொலையான நாகபத்ரம் நேற்று காலை தனது மாடுகளை ஓட்டிச்செல்வதற்காக நட்டாத்தி ஓடைபாலம் அருகே வந்துள்ளார்.  

அப்போது அங்கு வந்த தங்கராஜ் போன் செய்வதற்காக போன் கேட்டுள்ளார்.  ஆனால், நாகபத்ரம் போன் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.  இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், நாகபத்ரம் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி சராமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். தொடர்ந்து, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பியது தெரிய வந்தது.  இதனை அடுத்து, தங்கராஜை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து அரிவாள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.