ஸ்ரீரங்கம் கோவிலுக்கு, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வஸ்திரங்கள் வழங்கல்!

 
srirangam

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமிக்கு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி திருநாளன்று மூலவர் பெருமாள், உற்சவர் நம்பெருமாள், மூலவர் தாயார், உற்சவர் ரெங்கநாயகி தாயாருக்கு, திருப்பதி  தேவஸ்தானத்தில் இருந்து புதிய வஸ்திரங்கள், புதிய குடைகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது.  கடந்த கி.பி.1320ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள், திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார்.

sri

அத்துடன், திருப்பதி திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்து வந்த நிலையில் காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புதுவஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி, இந்த ஆண்டு நேற்று கைசிக ஏகாதசியையொட்டி திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு புதிய வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து ஸ்ரீரெங்க விலாஸ் மண்டபத்தில்  இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க புறப்பட்டு கருடாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோயில் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.