சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் பணம், 41 சவரன் நகை கொள்ளை!

 

சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் பணம், 41 சவரன் நகை கொள்ளை!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து 41 சவரன் நகைகள், ரூ.23 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல் அடுத்த மாலைப்பட்டி காமாட்சி நகரை சேர்ந்தவர் சிவகுமார்(40). இவர் திண்டுக்கல் தொழிற்பேட்டையில் சோப்பு கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வியும், கணவருக்கு துணையாக இருந்து வருகிறார். நேற்று தம்பதியினர் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, கம்பெனிக்கு சென்ற நிலையில், பணி முடிந்து இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர். கதவை திறந்து பார்த்தபோது, வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சோப்பு கம்பெனி உரிமையாளர் வீட்டில் ரூ.23 லட்சம் பணம், 41 சவரன் நகை கொள்ளை!

மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதனுள் வைத்திருந்த 41 சவரன் தங்க நகைகளையும், ரூ.23 லட்சம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும், வீட்டின் ஜன்னல் கம்பி உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர்களுக்கு, மர்மநபர்கள் ஜன்னல் வழியாக புகுந்து கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து, சிவகுமார் அளித்த தகவலின பேரில் திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வர வழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளையும் சேகரித்தனர். மேலும், கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், அதில் பதிவான கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.