மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை… அண்ணன், தம்பி வெறிச்செயல்!

 

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை… அண்ணன், தம்பி வெறிச்செயல்!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகேயுள்ள அச்சராஜாக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (23). பெயிண்டர். இவர், மாலப்பட்டியை சேர்ந்த நண்பர்களான கங்காதரன், சிரஞ்சீவி, முருகேசன் அகியோருடன் சேர்ந்து பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தார். இவர்களில் சிரஞ்சீவியும், முருகேசனும் உடன்பிறந்த அண்ணன், தம்பி ஆவர்.இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டதால் 4 பேரும் சேர்ந்து மதுவாங்கி, மாலப்பட்டி பிரிவு அருகே உள்ள காட்டுப் பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் குத்திக்கொலை… அண்ணன், தம்பி வெறிச்செயல்!

அப்போது, சம்பளம் பிரிப்பது தொடர்பாக கருப்பையாவுடன், சிரஞ்சீவி மற்றும் முருகேசனுக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் இருவரும், தாங்கள் வைத்திருந்த கத்தியால் கருப்பையா, கங்காதரனை சரமாரியாக குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இருவரையும், அருகில் இருந்தவர்கள் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கருப்பையா உயிர் இழந்தார்.

கங்காதரன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.