பணிக்கு வராத பட்டதாரி தூய்மை பணியாளர்கள்… வெற்றிலை, பாக்குடன் அழைப்பு விடுத்த சக பணியாளர்கள்!

 

பணிக்கு வராத பட்டதாரி தூய்மை பணியாளர்கள்… வெற்றிலை, பாக்குடன் அழைப்பு விடுத்த சக பணியாளர்கள்!

கோவை

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்டும், பணிக்கு வராமல் உள்ள பட்டதாரிகளை, வேலைக்கு வர வலியுறுத்தி வெற்றிலை, பாக்குடன் சக தூய்மை பணியாளர்கள் அழைப்பு விடுத்தனர்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இங்கு நிரந்தர துப்புரவு தொழிலாளர்களாக 2 ஆயிரத்து 520 பேர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்தாண்டு 549 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியான நிலையில், இதில் பட்டாதாரிகள், மென்பொருள் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு பணியில் இணைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பணிக்கு வராத பட்டதாரி தூய்மை பணியாளர்கள்… வெற்றிலை, பாக்குடன் அழைப்பு விடுத்த சக பணியாளர்கள்!

இந்த நிலையில், அவ்வாறு பணியில் சேர்ந்த பட்டதாரிகள் பலரும் தூய்மை பணியை செய்யாமல், அலுவலக பணிகளை மட்டும் செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால் தூய்மைப்பணி நியமன ஆணை பெற்றுக் கொண்டும், தூய்மை பணி செய்யாதவர்களை வேலைக்கு அனுப்ப வலியுறுத்தி, சக துப்புரவு தொழிலாளர்கள் மத்திய மண்டல ஆணையரிடம் வெற்றிலை, பாக்கு, இனிப்புகளுடன் தாம்பூல தட்டுடன் சென்று அழைப்பு விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தூய்மை பணியாளர்கள், கடந்த ஆண்டு 549 பேர் தூய்மை பணியாளர்களாக நியமித்த நிலையில், அவர்களில் 325 பேர் இதுவரை வேலைக்கு வராமல், அலுவலக பணியில் மட்டும் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தூய்மை பணியில் ஈடுபடும்படி கட்டாயப் படுத்தப்படுவதாக கூறிய தொழிலாளர்கள், இதனால் தூய்மை பணி குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டும் செய்யும் தொழிலாக கட்டமைக்கப் படுவதாகவும் குற்றம்சாட்டினர்.