வேலூர் அருகே கேபிள் தொழிலாளி அடித்துக் கொலை - மனைவி, மாமியார் கைது!

 
Murder

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே குடும்ப தகராறில் இளைஞரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மாமனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால்(40). இவர் கேபிள் தொழில் செய்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜெயபாலுக்கும், அவரது மனைவி வெண்ணிலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் வெண்ணிலா கோபித்துக் கொண்டு ஆற்காடு அடுத்த காவனூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

vellore

இதனை அடுத்து, பிரிந்து சென்ற மனைவியை அழைத்து வருவதற்காக ஜெயபால் நேற்று இரவு காவனூர் சென்றார். அங்கு மனைவியை வீட்டிற்கு அனுப்பும்படி மாமனார் மோகன், மாமியார் வளர்மதி ஆகியோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெண்ணிலா, அவரது தந்தை மோகன், தாய் வளர்மதி ஆகியோர் கத்தி, கம்பி உள்ளிட்டவற்றால் ஜெயபாலை சரமாரியாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த  ஜெயபால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திமிரி போலீசார்,  ஜெயபாலின் உடலை கைப்பற்றி வேலூர்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும்,இந்த சம்பவம் குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெண்ணிலா, அவரது தாய் வளர்மதி ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மோகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.