கார்த்திகை மாத பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கும் அய்யப்ப பக்தர்கள்... துளசிமாலை விற்பனை ஜோர்!

 
ayyappa

கார்த்திகை மாத பிறப்பையொட்டி, ஈரோட்டில் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்காக துளசி மாலை, பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.  

கேரளாவில் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி அன்று மாலை அணிந்து 41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து சென்று அய்யப்பனை தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தாக்கம் காரணமாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து,  சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதியான இன்று கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். 

sabari

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற அய்யப்பன் கோவில்களில் இன்று அதிகாலையில் இருந்தே சபரிமலை செல்லும் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள். இதில் மண்டல பூஜை தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 41 நாட்களும், மகர விளக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 60 நாட்கள் விரதம் கடைப்பிடிப்பது வழக்கம் ஆகும். சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவதற்காக நேற்று முன்தினம் முதலே கடைகளில் துளசி மாலைகளை வாங்குவதற்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். 

இதனால் நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் கடை வீதிகளில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைகளில் துளசிமாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை ஜோராக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர கருப்பு காவி கலர் துண்டுகள், வேட்டிகள் விற்பனையும் அமோகமாக இருந்ததாக தெரிவித்தனர்.