வெள்ளக்கோவிலில் பணிச்சுமையால் உதவி தோட்டக்கலை அலுவலர் தற்கொலை!

 
horticulture

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பணிச்சுமை காரணமாக உதவி தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் லோகேஷ்(29). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள தோட்டக்லைத்துறை அலுவலகத்தில், உதவி தோட்டக்கலை அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் டி.ஆர்.நகரில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார்.

poison

இந்த நிலையில், நேற்று வெள்ளக்கோவில் அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் லோகேஷ் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விரைந்து சென்று அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சிக்குள்ளான லோகேஷின் மனைவி சுகந்தி, வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது கணவர் கடந்த சில நாட்களாக பணிச்சுமையால் மனமுடைந்து காணப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க கூடும் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.