கடனுக்காக செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்… இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

 

கடனுக்காக செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்… இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

தென்காசி

தென்காசி அருகே கடனை கேட்டு செல்போனை பறித்துக்கொண்ட இளைஞரை, வெட்டிப் படுகொலை செய்த 3 நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்துள்ள இராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் விஜய் கணேசன் (21). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (21), அருளாச்சியை சேர்ந்த கோபி ஆனந்த் (23) மற்றும் மகேந்திரன் (18) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.

இதனிடையே முத்துகிருஷ்ணன், தனது நண்பனான விஜய் கணேசிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால், அதனை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் கணேசன், சில நாட்களுக்கு முன்பு முத்துகிருஷ்ணனின் செல்போனை வாங்கிக் கொண்டு, பணத்தை கொடுத்து விட்டு பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார்.இதனால் அவமானத்திற்குள்ளான முத்துகிருஷ்ணன், செல்போனை பறித்த விஜய் கணேசனை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.

கடனுக்காக செல்போனை பிடுங்கியதால் ஆத்திரம்… இளைஞரை சரமாரியாக வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

இதற்காக, நண்பர்கள் கோபி ஆனந்த், மகேந்திரன் ஆகியோருடன் சேர்ந்து, கூடலூர் மொட்டைமலைக்கு சென்ற அவர், விஜய் கணேசனை அங்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனை அடுத்து, அங்குசென்ற விஜய் கணேசன், நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, செல்போன் விவகாரம் தொடர்பாக விஜய் கணேசனுக்கும், முத்து கிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட மூவரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜய் கணேசனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விஜய் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து முத்துக்கிருஷ்ணன், கோபிஆனந்த், மகேந்திரன் ஆகியோரை கைதுசெய்தனர்.