நாகை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள ஆம்பர் கிரீஸ் பறிமுதல் - இருவர் கைது!

 
amber grish

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான ஆம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தியை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்றிருந்த வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்த பாலகுரு மற்றும் ஆனந்த் என்கிற சத்தியானந்தம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களிடம் இருந்த பையை பறித்து சோதனையிட்டனர்.

arrest

அதில், 2.36 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல வாந்தி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி என கூறப்படுகிறது. இதனை அடுத்து, அம்பர் கிரீஸ் பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார், இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம், ஆம்பர்கிரீஸ் எங்கிருந்து கிடைத்தது என்றும், யாரிடம் அதனை விற்பனை செய்ய முயற்சித்தனர் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.