"ஈரோடு மேற்கு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி இலக்கை அடையும்" - கே.ஏ.செங்கோட்டையன்

 
admk

ஈரோடு மேற்கு மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் அதிமுக வெற்றி இலக்கை அடையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நகர்ப்புற ஊரக ஊராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் ஆன கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். 

பின்னர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், அந்தியூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் மாபெரும் வெற்றியை பெற்று தருவதற்காக பணிகளை கட்சி தொண்டர்களுடன், தோழமைக் கட்சிகள் இணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம். 

அதிமுக அரசு, ஆட்சியில் இருந்தபோது செய்த பணிகளை ஒவ்வொரு வீடாக கொண்டுசென்று எடுத்துரைத்து, அதிமுக சார்பில் போட்டியிடும் அனைவருக்கும் மாபெரும் வெற்றியை  பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். 3 தொகுதிகளிலும் வெற்றி இலக்கை அடைவதில் எந்த அச்சமும் தேவையில்லை. 3 சட்டமன்ற தொகுதியில் இருக்கும் நகராட்சி பேரூராட்சி அனைத்தையும் அதிமுக கையில் ஒப்படைக்கும் அளவிற்கு மக்கள் மனநிலை மாறியுள்ளது. வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

admk

இதேபோல், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி, மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கான தொகைகளை செலுத்தி மனுக்களை  பெற்று, பூர்த்தி செய்து மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை மேயர்  கே.சி.பழனிசாமி,  பகுதி செயலாளர்கள் இரா.மனோகரன், கேசவமூர்த்தி, ஜெகதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டு மனுக்களை வாங்கினர்.