நரிக்குறவர் சமூகத்தினருக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை - தூத்துக்குடி ஆட்சியர்

 
tuti

தூத்துக்குடியில் நரிக்குறவர் சமூக மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட்டு, பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின்  நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின இனத்தை சேர்ந்த மக்களுக்கான, அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், புதிய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வரும் 50 குடும்பங்களை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தினரை நேரில் சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.  

அப்போது, அவர்கள் தங்களுக்கு ஆதார், ரேஷன் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் தங்களுக்கு இல்லை என தெரிவித்தனர். அதனை கேட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஆதார் அட்டை, வாக்காளர்  அட்டை எடுப்பதற்கு உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  மேலும், நரிக்குறவ மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் விரைவில் எடுக்கப்பட்டு, அதில் பசுமை வீடுகளும் கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார்.

tuti

இதனிடையே, தங்கள் வசிப்பிடத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜை, நரிக்குறவர் சமூக மக்கள் பாசி மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.  மேலும், புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும் படி அவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, குழந்தைக்கு முருகவள்ளி என பெயர் சூட்டினார். அதனை கேட்டு, உற்சாக மிகுதியால் ஆரவாரம் செய்த அவர்கள், தங்களின் கோரிக்கையை கேட்டு உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறிய ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.