கன்னியாகுமரி அருகே அணையில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி!

 
drowning

கன்னியாகுமரி அருகே  உள்ள பொய்கை அணை மறுகாலில் குளித்த இளைஞர் ஒருவர், ஆழமான பகுதியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் லட்சுமணன் (27 ). இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், லட்சுமணன் இன்று காலை தனது நண்பர்களுடன் பொய்கை அணையின் மறுகால் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். முழு கொள்ளளவை எட்டியதால் பொய்கை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வேகமாக வெளியேறி வரும் நிலையில், அணை அருகேயுள்ள மறுகாலில் லட்சுமணன் குளித்துக் கொண்டிருந்துள்ளார். 

kumari

அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்த லட்சுமணன், தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவரது நண்பர்கள் அணைப் பகுதியில் அவரை தேடினர். ஆனால், லட்சுமணன் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அணையில் மூழ்கிய லட்சுமணனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அப்போது, அணையின் அருகே ஆழமான பகுதியில் லட்சுமணனின் உடல் மிதப்பதை கண்ட தீயணைப்பு வீரர்கள், அந்த இடம் மிகவும் ஆழமான பகுதியாக உள்ளதால் உடலை மீட்க முடியாமல் போராடி வருகின்றனர். பொய்கை அணையில் மூழ்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.