தருமபுரி அருகே கார் கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகள் பலி... பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
dharmapuri

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே நெடுஞ்சாலையில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த விபத்தில் தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் வீரன் (40). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு மனைவி உமாலட்சுமி(35), மகள் சுஷ்மிதா(13) ஆகியோருடன் சொந்த ஊருக்கு வந்திருந்த வீரன் நேற்று மாலை காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பொன்னேரி பகுதியில் பெங்களுரு நெடுஞ்சாலையில் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி அங்குள்ள 70 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. 

car

கிணற்றில் விழும் முன் காரின் ஒருபக்க கதவு திறந்ததால் உமாலட்சுமி தரையில் விழுந்து உயிர் தப்பினார். வீரனும், அவரது மகள் சுஷ்மிதாவும் காருடன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் கிணற்றில் இருந்து காரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர், கண்ணாடிகளை உடைத்து  காரில் இருந்த இருவரது உடல்களையும் மீட்ட தீயணைப்பு வீரர்கள், அதனை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்தில் காயமடைந்த உமாலட்சுமி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கார் காட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.