கரூர் அருகே மழையில் வீட்டின் சுவர் இடிந்து சிறுவன் பலி!

 
wall collapse

கரூர் மாவட்டம் புலியூர் அருகே மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்

கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். கூலி தொழிலாளி. இவரது மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு ஆகாஷ் (16), சுனில் (11) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள்  கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளியில் முறையே 11 மற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.  ஆறுமுகம் மண் சுவரினால் கட்டப்பட்ட,ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஆறுமுகத்தின் வீட்டின் பக்கவாட்டு சுவர்கள் மழையில் நினைந்து ஈரப்பதத்துடன் காணப்பட்டு வந்துள்ளது. 

karur

நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென வீட்டின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து தூங்கி கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அவரது அண்ணன் ஆகாஷ் காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார், காயமடைந்த சிறுவன் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக கருர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், உயிரிழந்த சிறுவன் சுனிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.