காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்... விழுப்புரம் அருகே பரபரப்பு!

 
villupuram

விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்த 2 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் கோபிநாத்(26). இவரும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்பரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு கலைச்செல்வியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம்  செய்து கொண்டுள்ளனர்.

vilupuram

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கலைச்செல்வி தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபிநாத் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியபோதும், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், புதன் கிழமை காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் கலைச்செல்வி சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியதச்சூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கலைச்செல்வியின் தந்தை முருகன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிநாத், அவரது தந்தை ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.