சங்கராபுரம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணை!

 
suicide

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். தொழிலாளி. இவருக்கு, கடந்த 4  ஆண்டுகளுக்கு முன் சஞ்சீவி (21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ராமகிருஷ்ணன் மனைவி சஞ்சீவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சஞ்சீவி மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.

kallakurichi GH

இந்த நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த சஞ்சீவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சஞ்சிவியின் பெற்றோர்,  கணவர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மீது வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் தனது மகளின் இறப்புக்கு கணவர் ராமகிருஷ்ணன், அவரது பெற்றோர் ராமசாமி - ஜெயக்கொடியே காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்து, போலீசார் சஞ்சீவியின உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 4 ஆண்டுகளில் சஞ்சீவி இறந்ததால் இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ பவித்ரா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.