கரூர் அருகே முன் விரோதத்தில் பெண் அடித்துக்கொலை!

 
murder

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணை களைக்கொத்தியால் அடித்துக்கொலை செய்த, மற்றொரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள பில்லுர் பெரியவீட்டுக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மனைவி வசந்தா (39). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி சரோஜாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று கலை வசந்தா கிராமத்தில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த கணவர் முத்துசாமி  வயலுக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள கிணற்றில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துசாமி, தோகைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thogamalai

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் சரோஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், வசந்தா வயலில் இருந்தபோது அங்கு சென்ற சரோஜாவுடன் அவருக்கு தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரோஜா, தான் வைத்திருந்த களைக்கொத்தியால் வசந்தாவை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வசந்தாவை, அவர் கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் சரோஜாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.