கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி மையத்தில் காட்டுயானை தாக்கி பெண் படுகாயம்!

 
cbe

கோவை மாவட்டம் கதிர்நாயக்கன் பாளையம் மத்திய ரிசர்வ் படை பயிற்சி மையத்தில் காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்தார்.

கோவை மாவட்டம் துடியலுர் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் படையின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த மையத்தில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் , நேற்றிரவு 7 மணி அளவில் பயிற்சி வளாக குடியிருப்பில் தங்கியிருந்த சிஆர்பிஎப் ஐ.ஜியின் மெய் காவலரான மோகன் என்பவரது மனைவி ராதிகா நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, ராதிகாவை தாக்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

elephant

அவரை உடனிருந்தவர்கள் மீட்டு பயிற்சி மைய வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக துடியலுரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மத்திய ரிசர்வ் படை வளாகத்தில் இருந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்த சம்பவம் சிஆர்பிஎப் பயிற்சி மைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.