சிவகாசி அருகே கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead body

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்துள்ள தாயில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்(28). கூலி தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. பாலமுருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

\vembakottai

அப்போது, அவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பாலமுருகன் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், கோட்டையூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் மாயமான தொழிலாளி பாலமுருகன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.