"விநயாகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும்" - விருதுநகர் ஆட்சியர்!

 
virudhunagar

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்குமாறு பொதுமக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், களிமண்ணால் செய்யப்பட்டதும், மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூல பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான  விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ள அவர், நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் / பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

vinayagar chadurthi

மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் / எண்ணெ வண்ணப்பூச்சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும், சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுக்களை பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ள அவர், சுற்றுச்சூழக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள் : விருதுநகரை சுற்றியுள்ள இடங்களில் இருந்து வரும் சிலைகள் கல் கிடங்கில். ஆவுடையாபுரத்தில் இருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தாத கிணற்றில். சிவகாசி நகர் புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வானை நகரில் உள்ள உபயோகப்படாத கிணற்றில். அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயில்.

ராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியில். ஸ்ரீவில்லிபுத்துர் நகரில் இருந்து வரும் சிலைகள் ஸ்ரீவில்லிபுத்துர் மடவார் வளாகத்தில். ஸ்ரீவில்லிபுத்துர் தாலுகாவில் இருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை கோனகிரி குளத்தில்.