முசிறி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!

 
bribe

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தேவனூர் புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இவரது தந்தை ராமையா இறந்துவிட்டார். இதனால், அவரது பெயரில் உள்ள சொத்துக்களை, அவரது வாரிசுகளான மனைவி அமுதா, மகன் செல்லதுரை உள்ளிட்ட 4 பேரின் பெயருக்கும் மாற்றம் செய்யக்கோரி செல்லதுரை, தேவானூர் புதூர் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வநாத் என்பவரை அணுகி உள்ளார். அப்போது,  ராமையா பெயரில் உள்ள சொத்துக்களை, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். செல்லத்துரை தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியதால், பின்னர் 4 ஆயிரம் வாங்கிக்கொள்ள விஏஓ விஸ்வநாத் சம்மதித்து உள்ளார்.

bribe

இதனிடையே, லஞ்சம் தர விருப்பமில்லாததால் செல்லதுரை, இது குறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார். பின்னர் அவர்களது ஆலோசனையின் படி, செல்லத்துரை ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை இன்று வி.ஏ.ஓ விஸ்வநாத்திடம் சென்று வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார், விஏஓ விஸ்வநாத்தை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.