கோவில்பட்டியில் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் வெட்டிக்கொலை... மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
murder

கோவில்பட்டியில் தனியார் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில், இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், நேற்று இரவு ஆனந்தராஜ் காப்பகத்தில் பணியில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை எடுப்பதற்காக சென்றபோது, ஆனந்தராஜ் கட்டிலில் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

kovilpatti

இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள், கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆனந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். 

ஆனந்தராஜை கொலை செய்த நபர்கள், போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக, அவரது உடலை சுற்றிலும் மிளகாய் பொடியை தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை அடுத்து, கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன், ஆனந்தராஜ் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாகன காப்பக உரிமையாளர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.