திண்டுக்கல் அருகே இருசக்கர வானத்தில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தலை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட எஸ்பி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலாண்டி, உதவி ஆய்வாளர் மலைச்சாமி தலைமையிலான போலீசார், அனுமந்தராயன் கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பிரபாகரன்(28), சரத்குமார்(22) என தெரியவந்தது. இதனை அடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.