காரிமங்கலம் பகுதியில் ஆன்லைனில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது!

 
palacode

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்த 2 நபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைனில் ஜிபே, போன் பே, பேடிஎம் மூலம் பணம் பெற்றுக்கொண்டு இளைஞர்கள், கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட எஸ்பி கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டார். அதன் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் பாரதி மோகன் தலைமையில் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டனர்.

palacode

இந்த நிலையில், அனுமந்தபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற 2 இளைஞர்களை துரத்திச் சென்றனர். பாலக்கோடு அருகே அவர்களை மடக்கிபிடித்து சோதனையிட்டபோது, அவர்கள் 2 கிலோ கஞ்சாவை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் காரிமங்கலம் அருகே ஆலமரசப்பட்டு பகுதியை சேர்ந்த சக்திவேல்(40), ராமமூர்த்தி(30) ஆகியோர் என்பதும், அவர்கள் ஆன்லைன் மூலம் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, இருவரும் பாலக்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.