செம்பட்டி அருகே லாரி - ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதல் ; லாரி ஓட்டுநர் பலி, 10 பேர் படுகாயம்!

 
dgl

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே லாரியும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்து ஒட்டுநர் உள்ளிட்ட 10 பேர் பலத்த காயமடைந்தனர்.

தென்காசி அருகே இடைகால் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (47). லாரி ஓட்டுநர். இவர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் இருந்து செங்கற்களை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை செம்பட்டி அடுத்துள்ள சித்தையன்கோட்டை போடிகாமன்வாடி அருகே சென்றபோது, எதிரே சென்னையில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி ஓட்டுநர் மாடசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

dead

மேலும், ஆம்னி பேருந்து ஒட்டுநர் உள்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான லாரி ஓட்டுநர் மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.