ஆடுகள் விஷம் வைத்து கொலை... ஆட்சியர் அலுவலகத்திற்கு அல்வா உடன் வந்து மனு அளித்த முதியவர்!

 
cbe

தனது ஆடுகளுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் அல்வா உடன் வந்து மனு அளித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை, வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில், பழனியப்பன், பாண்டியன் ஆகிய 3 பேர் விஷம் வைத்து கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெகநாதன், வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் 3 ஆண்டுகள் ஆகியும் புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனு அளித்துள்ளார். இந்த நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஜெகநாதன் அல்வா உடன் வந்து நுதன முறையில் மனு அளித்தார்.

cbe

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாதன், தனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 3 ஆண்டுகளாக அலைக்கழிப்பதாகவும்,  தனது ஆடுகளை திருப்பி அளித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், 3 ஆண்டுகளாக தனது புகாரை விசாரிக்காமல் அல்வா கொடுத்தவர்களுக்கு தற்போது அல்வா கொடுக்கவே அல்லாவை எடுத்து வந்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.