ஓமலூர் அருகே கருக்கலைப்பு செய்த மாணவி உயிரிழந்த விவகாரம்... ஜாமினில் வெளியே வந்த அண்ணன் தற்கொலை!

 
dead

ஓமலூர் அருகே தங்கையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மேல்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் தனது உடன் பிறந்த தங்கையான 19 வயது பொறியியல் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பமடைந்த நிலையில், ஹரிஷ் கடந்த 2018ஆம் ஆண்டு காடையாம்பட்டி பகுதியில் உள்ள போலி மருத்துவர் சுல்தானா என்பவரிடம் அவரை ரகசியமாக அழைத்துச் சென்று, கருக்கலைப்பு செய்துள்ளார்.

omalur

இதில் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் சேலம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் விசாரணையில் ஹரிஷ், அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹரிஷ், போலி மருத்துவர் சுல்தானா ஆகியோரை கைது செய்தனர். சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஹரிஷ் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வரும் என அச்சமடைந்த ஹரிஷ், நேற்று முன்தினம் இரவு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தீவட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.