ஈரோட்டில் தமிழ்ப்புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

 
tpk

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து, ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கடந்த 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற  குஜராத் கலவரத்தின்போது, முஸ்லிம் 5 மாத கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாா்.  இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை, அண்மையில் குஜராத் மாநில பாஜக அரசு விடுதலை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த குஜராத் பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

tpk

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் தலைமை வகித்தார். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் சாதிக், எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முகமது லுக்மான் ஹக்கீம், மக்கள் பாதுகாப்பு அமைப்பு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், கிழக்கு மாவட்ட செயலாளர் சசிகுமார், தமிழ் புலிகள் கட்சி மு.பொதுச் செயலாளர் இளவேனில் ஆகியோர் கலந்து கொண்டு, பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக அறிவழகன், சலீம் பாஷா, அப்துல் சமது, பாலசுப்புரமணி சுரேஷ் அந்தோணி மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, குஜராத் பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.