10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

திருவள்ளூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் ராமத்தண்டலம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அருகில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், மாணவிக்கு உறவினர் வீட்டில் வசித்து வரும் நாகராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. நாகராஜுக்கு, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

arrest

இந்த நிலையில், மாணவியும், நாகராஜும் நெருங்கி பழகிய நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நாகராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை தொடர்ந்து, அவர் மாணவியை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது, உறவினர் வீட்டில் வசிக்கும் நாகராஜ், அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், மகளிர் போலீசார், நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.