கோவையில் உரிய அனுமதியின்றி இயங்கிய 2 நிறுவனங்களுக்கு சீல்வைப்பு... மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

 
industries

கோவை டிவிஎஸ் நகரில் உரிய அனுமதியின்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்ட 2 நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோவை டிவிஎஸ் நகரில் வசித்து வருபவர் முன்னாள் வருவாய் துறை ஊழியர் கனகாசலம். இவர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் தான் வசிக்கும் டிவிஎஸ் நகரில் இயங்கி வரும் சதிஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கங்கா ஹாஸ்பிட்டாஸ், பிரபு என்பவருக்கு சொந்தமான ஹரி என்ஜினியரிங் ஆகிய 2 நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாகவும் தெரிவித்து இருந்தார். புகாரின் அடிப்படையில், கோவை மாநகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 2 தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வந்தனர். அதில் புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வரவே, 2 நிறுவனங்களையும் மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நேற்று மாநகராட்சி அதிகாரிகள் கங்கா ஹாஸ்பிட்டாஸ், ஹரி இன்ஜினியரிங் ஆகிய 2 நிறுவனங்களையும் பூட்டி சீல் வைத்தனர். 

industry

இந்த நிலையில், கோவை மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கையில், முகாந்திரமற்ற புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் 2 நிறுவனங்களுக்கு பூட்டி சீல் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சுற்றுச்சூழல் மாசு என்ற பெயரில் கட்டிடத்தின் உரிமையாளரை பழிவாங்கும் நோக்கில் கனகாசலம் அளித்த முகாந்திரமற்ற புகாரின் பேரில் 2 தொழிற்கூடங்கள் பலியானதாக தெரிவித்துள்ளனர்.