ஈரோட்டில் ஓடும் பேருந்தில் நெஞ்சுவலியால் தனியார் நிறுவன ஊழியர் பலி!

 
dead

திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்த  அரசுப்பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் பனியன் கம்பெனி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஈரோடு சூரம்பட்டி வலசு அணைக்கட்டு 4-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை ராஜ்குமார் வேலைக்கு செல்வதற்காக ஈரோட்டில் இருந்து பேருந்து முலம் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் உடனடியாக தனது குடும்பத்தினருக்கு செல்போனில்  தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து, ராஜ்குமாரை ஈரோடுக்கு வருமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

bus

அதன் பேரில், ராஜ்குமார் திருப்பூரிலிருந்து ஈரோடு செல்லும் அரசுப்பேருந்தில் ஏறி வந்து கொண்டுருந்தார். அந்த பேருந்து ஈரோடு பேருந்து நிலையம் வந்தபோது பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், ராஜ்குமார் சீட்டில் மயங்கிய நிலையில் மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜ்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.