மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண், குழந்தை பலி... வேலூர் அருகே சோகம்!

 
vellore

வேலூர் அருகே மலைக்கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லாததால் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ஜார்தான்கொல்லை ஊராட்சி எலந்தம்புதூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் காஞ்சனா(22). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பீஞ்சமந்தை ஊராட்சி சின்ன எட்டிப்பட்டியை சேர்ந்த குள்ளையன்(28) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காஞ்சனா பிரசவத்திற்காக தாய் வீடான எலந்தம்புதூரில் தங்கி இருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை காஞ்சனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  கணவர் வெளியூர் சென்றிருந்ததால், உறவினர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து பீஞ்சமந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

dead

ஆனால் மலைக்கிராமத்தில் சரியான சாலை வசதி இல்லாததால், வழியிலேயே காஞ்சனாவிற்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இதனை  தொடர்ந்து, அவருக்கு அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டு, அவரும் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அணைக்கட்டு வட்டார மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார், காஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர். அப்போது அவரது சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், காஞ்சனா பிரசவ வலியால் இயற்கையாக உயிரிழந்தார் என்றும், சாலை வசதி இருந்திருந்தால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்போம் என்றும் கூறினர்.

இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பீஞ்சமந்தை எட்டிப்பட்டி மலைப்பகுதியில் சாலை அமைப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், பொதுமக்கள் போரட்டத்தை கைவிட்டு காஞ்சனாவின் உடலை எடுத்துச்சென்றனர்.