ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு சீல்வைக்க உத்தரவு... வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஊழியர்கள் தர்ணா!

 
sudha hospital

ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டை பெறப்பட்ட சம்பவத்தில் தனியார் மருத்துவமனைக்கு சீல்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை,  இடைத்தரகராக செயல்பட்ட பெண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு, சிறுமியிடம் கருமுட்டை பெற்ற தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

sudha hospital

அதன்படி, ஈரோட்டில் உள்ள சுதா மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மருத்துவமனைக்கு சீல்வைக்க உத்தரவிட்டது.  

இந்த நிலையில், சுதா மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தரணா போராட்டம் நடைபெறுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.